டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக வெற்றியும் அதிக வாக்கு வித்தியாசமும் பெற்றுள்ள நிலையில், டெல்லியை சுற்றியுள்ள 4 மக்களவை தொகுதிகளையும் அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
டெல்லியை சுற்றியுள்ள கௌதம புத்தா நகர், காசியாபாத், பரிதாபாத், குர்காவோன் ஆகிய 4 மக்களவை தொகுதிகளையும் பாஜக வேட்பாளர்கள் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
கௌதம புத்தா நகர், காசியாபாத் ஆகிய 2 தொகுதிதள் உ.பி.யிலும், பரிதாபாத், குர்காவோன் ஆகிய தொகுதிகள் ஹரியாணாவிலும் வருகின்றன. டெல்லியை சுற்றியுள்ள இந்த 4 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றுவது இதுவே முதல்முறை.
காசியாபாத் தொகுதியில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பரை 5,67,260 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கௌதம புத்தா நகரில் மகேஷ் சர்மா வெற்றி பெற்றார். இவர் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் நரேந்திர பட்டியை தோற்கடித்தார். ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை 40 நிமிடத்தில் சஸ்பெண்ட் செய்யச் செய்ததாக பேசியவர் பட்டி. இந்த விவகாரம் உ.பியில் கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குர்காவோனில் பாஜகவின் இந்திரஜித், தனக்கு அடுத்த வந்த ஆம் ஆத்மி வேட்பாளரை சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பரிதாபாத்தில் பாஜகவின் கிருஷ்ணன் பால், காங்கிரஸ் வேட்பாளர் அவதார் சிங் பதானாவை சுமார் நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
‘நோட்டா’ 60 லட்சம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ‘நோட்டா’ (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை நன் ஆப் த எபவ்) வசதியை பயன்படுத்தியுள்ளனர்.
இது 543 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 1.1 சதவீதம் ஆகும். ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 21 கட்சிகள் பெற்ற வாக்குகளை விட ‘நோட்டா’ வாக்குகளின் எண்ணிக்கையும் சதவீதமும் அதிகம். சதவீத அடிப்படையில், நாட்டில் புதுச்சேரியில் தான் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.
இங்கு பதிவான வாக்குகளில் 3 சதவீத வாக்குகள் (22,268) நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது. இதையடுத்து மேகாலயாவில் 2.8 சதவீத (30,145) வாக்குகள் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத், சத்தீஸ்கர், தாத்ரா நாகர் ஹாவேலியில் தலா 1.8 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் ஆகும். நோட்டா வசதி முதல்முறையாக இந்த மக்களவைத் தேர்தலில்தான் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.