ஜார்க்கண்ட் தேர்தலில் கட்சி மாறிப் போட்டியிட்ட எம்எல்ஏக்களை பொதுமக்கள் தோல்வி அடையச் செய்துள்ளனர். இதேபோல் ஹரியாணா, மகாராஷ்டிராவின் தேர்தல்களிலும் நடந்துள்ளது.
நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தம் எம்எல்ஏ அல்லது எம்.பி. பதவி முடிந்தவுடன் மீண்டும் தேர்தலில் போட்டியிட முயல்வது உண்டு. இவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதபோது வேறு கட்சிகளுக்குத் தாவி விடுவதும் உண்டு.
மேலும் சிலர் தாம் தாவும் கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தவறாகக் கருதி அதில் சேர்வதும் உண்டு. இதுபோன்று கட்சி தாவிய அரசியல்வாதிகள் பலரும் கடந்த அக்டோபரில் முடிந்த ஹரியாணா, மகாராஷ்டிர தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தனர்.
இவர்களில் பலரும் தேர்தலுக்கு சற்று முன்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள். இவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கண்ட பின்பும் மற்ற மாநில அரசியல்வாதிகள் கட்சி தாவுவது நின்றபாடில்லை.
ஜார்க்கண்டிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தேர்தலுக்கு சற்று முன்னதாக பாஜகவில் இணைந்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பல்வேறு கட்சிகளின் 12 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவரான சுக்தேவ் பகத், அக்கட்சியின் மூத்த எம்எல்ஏவான மனோஜ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் இளம் எம்எல்ஏவான குணால் சாதங்கி, ஜே.பி.பட்டேல் ஆகியோர் பாஜகவில் இணைந்து போட்டியிட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜார்கண்ட் தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவின் மூலம் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக கட்சி மாறிய ஆறு எம்எல்ஏக்களில் நால்வரை அவர்கள் தொகுதியில் இருந்து பொதுமக்கள் மாற்றிவிட்டனர்.