இந்தியா

குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: கேரள முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக வரும் 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

கேரளாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஆளும் இடதுசாரி கட்சிகளும், எதிர்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. திருவனந்தபுரத்தில் அண்மையில் நடந்த போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவும் பங்கேற்றனர்.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக வரும் 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூக அமைப்புகள், மத அமைப்புகள் உள்ளிட்டவற்றின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT