இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்றால் முஸ்லிம்களை ஏன் சேர்க்கக் கூடாது?- பாஜகவுக்கு நேதாஜி உறவினர் சரமாரி கேள்வி

ஏஎன்ஐ

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் அதில் முஸ்லிம்களையும் ஏன் சேர்க்கக் கூடாது? என மே.வங்க பாஜக துணைத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினருமான சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு போராட்டங்கள் நடைபெறுகிறது எனக் கூறி மேற்குவங்கத்தில் பாஜகவினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணி முடிந்த சில மணி நேரங்களில் மேற்குவங்க பாஜகவின் துணைத் தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உறவினருமான சந்திரகுமார் போஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் குறிவைப்பதாக இல்லை என்றால் எதற்காக இந்து, சீக்கியர், பெளத்தர், கிறிஸ்தவர், பார்ஸி, ஜெயின் என்ற பட்டியல் இட்டிருக்க வேண்டும்! ஏன் அந்தப் பட்டியலில் முஸ்லிம்களையும் சேர்க்கக் கூடாது? வெளிப்படைத் தன்மையுடன் இருக்கலாமே" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், "இந்தியாவை வேறு எந்த ஒரு தேசத்தோடும் ஒப்பிடவும் வேண்டாம், சமன்படுத்தவும் வேண்டாம். ஏனென்றால் இத்தேசம் எல்லா மதத்தினருக்கும் சமூகத்தினருக்குமானது" எனப் பதிவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த சந்திர குமார் போஸ் தனது ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டிருப்பது அக்கட்சியினருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

ஏற்கெனவே, பாஜகவின் கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தலக் கட்சியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT