ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் இன்று முதல்வராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்யவுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன.
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை. இதில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றன.
பாஜக 25 இடங்களிலும், ஜேவிஎம் கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களிலும், .காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 1 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா, ஹேரத் ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றுள்ளார். பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஜாம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட சரயு ராய் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து ரகுபர் தாஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு ஏதுவாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
இந்தக்கூட்டத்தில் அவர் முறைப்படி சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். பின்னர் ஆளுநர் திரவுபதி முர்முர்வை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். அவரது அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் அமைச்சர்கள் பதவியேற்பர் எனத் தெரிகிறது.