குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்றுவருகின்றன. கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, பெல காவி, குல்பர்கா உள்ளிட்ட இடங் களில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு நேற்று தளர்த்தப் பட்ட நிலையில் பெங்களூருவில் 35 இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. சிவாஜிநகர், ஆர்.டி.நகர், பெரி யார் நகர், பிரேசர் டவுன் உள் ளிட்ட பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தேசிய கொடியு டன் திரண்டனர். இதனால் கடைகள், பள்ளிகள், தனியார் அலுவலகங் கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பென்சன் டவுன் ஈத்கா மைதானத்தில் திரண்ட போராட்டக் காரர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த பேரணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷ் மந்தர் பேசும்போது, "ஆங்கிலேயர்களின் சட்டத்தை எதிர்த்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியதைப் போல, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக நாமும் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க வேண்டும். காந்தியின் முதல் நாள் போராட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் கைதாகி, ஆங்கிலேய அரசை நடுங்க வைத்தனர்.
இதுபோல நாமும் பெரிய அளவில் முன்னெடுத்தால் பாஜக அரசு மக்களின் குரலை கேட்கும்" என்றார். இதேபோல அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோரும் மத்திய அரசுக்கு எதிராக உரையாற்றினர்.