குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து லக்னோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை சதாப் ஜாஃபர் கைது செய்யப்பட்டுள்ள விதம் மிகவும் மோசமானது என்று பாலிவுட் இயக்குநர் மீரா நாயர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா, 'கல்லி பாய்' திரைப்பட நடிகர் விஜய் வர்மா ஆகியோரும் தங்கள் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் நாடு முழுவதும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. கடந்த வியாழன் அன்று காங்கிரஸ் கட்சி சார்பாக லக்னோவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லக்னோவின் பரிவர்த்தன் சவுக்கில் நடைபெற்ற போராட்டம் கட்டுப்பாட்டை மீறியதால் போலீஸார் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.
போராட்டத்தில் இருந்த பாலிவுட் நடிகை சதாப் ஜாஃபர் அப்போது தனது ஃபேஸ்புக்கில் நேரலையில் இருந்தார். அப்போது போலீஸார் தடியால் அடித்து சதாப் ஜாஃபரின் வயிற்றில் உதைத்து இழுத்துச் செல்லும் காட்சி அதில் வெளிவந்தததாகக் கூறப்படுகிறது.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை சதாப் ஜாஃபர், இயக்குநர் மீரா நாயர், இயக்குநர் ஹன்சல் மேத்தா
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள பாலிவுட் பெண் இயக்குநரும் கோல்டன் குளோப் விருது வென்றவருமான மீரா நாயர் ட்விட்டரில் கூறுகையில், “இது நம் இந்தியா இப்போதுதான் - அச்சமாக உள்ளது: லக்னோவில் அமைதியான போராட்டத்திற்காக எங்கள் #SutableBoy நடிகை சதாப் ஜாஃபர் சிறையில் அடைக்கப்பட்டார்! அவரை விடுவிக்கக் கோரி என்னுடன் சேருங்கள்” என்று ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தனது மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ஹன்சல் மேத்தா கூறுகையில், ''இது அதிர்ச்சியளிக்கிறது. போராட்டத்தை எதிர்கொள்வதில் மிருகத்தனத்தைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது. மக்கள் ஒரு ஸ்தாபனத்தை எந்த அளவுக்கு உலுக்கியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. #ReleaseSadafJafar'' என்று தெரிவித்துள்ளார்.
'ஏ சூட்டபிள் பைய்' படத்தில் ஜாஃபருடன் பணிபுரிந்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ட்விட்டரில் கூறுகையில், ''நான் அவருடன் ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இருந்தேன். இப்போது அவர் சிறையில் இருக்கிறார்! இது மோசடியானது. இது கீழினும் கீழானது'' என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி கண்டனம்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சதாப் ஜாஃபர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்றிரவு ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில், ''எங்கள் கட்சி ஊழியர் சதாப் ஜாஃபர் போலீஸாரிடம் விதிமுறைகளின்படி செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் உ.பி. காவல்துறை அவரை மோசமாக அடித்துக் கைது செய்தது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது அத்துமீறிய செயலும் இந்த வகை ஒடுக்குமுறையும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது'' என்று தெரிவித்துள்ளார்.
உ.பி. போலீஸ் மறுப்பு
சதாப் ஜாஃபர் நெறிமுறைகளை மீறிக் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உ.பி.போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். சதாப் ஜாஃபரைக் கைது செய்யும்போது அவர் கலகக்காரர்களுடன் போராட்டக் களத்தில் இருந்தார் என்றும் போலீஸார் கூறினர்.