இந்தியா

முன்பதிவு செய்த இருக்கை கிடைக்காததால் விமானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்: வைரலாகும் வீடியோ

ஏஎன்ஐ

விமானத்தில் தான் முன்பதிவு செய்த இடத்தைத் தனக்கு ஒதுக்கவில்லை எனக் கூறி அண்மையில் பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் விமான சிப்பந்திகளுடனும் சக பயணிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பயணிகள் சிலர் பாஜக எம்.பி.யை சரமாரி கேள்வி கேட்பதும் அதற்கு அவர் காட்டமாக பதில் சொல்வதும் இடம்பெற்றுள்ளது.

டெல்லியிலிருந்து போபால் செல்லும் தனியார் விமானத்தில் பயணப்பட வந்த பிரக்யா தாகூர், தான் முன்பதிவு செய்த இருக்கை வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அப்போது பயணி ஒருவர் எம்.பி.யிடம், "நீங்கள் மக்கள் பிரதிநிதி. உங்கள் பணி எங்களைத் தொந்தரவு செய்வதில்லை. உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால் அடுத்த விமானத்தில் வாருங்கள்" என்று கூறுகிறார்.

இதற்கு பாஜக எம்.பி. பிரக்யா, "முதல் வகுப்பும் இல்லை வசதியும் இல்லை பின்னர் ஏன் நான் பயணிக்க வேண்டும்" எனக் கோவமாகக் கேட்கிறார்.

உடனே பயணி ஒருவர், “முதல் வகுப்பு உங்கள் உரிமை இல்லை. உங்களால் ஒரே ஒரு பயணி தொந்தரவுக்கு உள்ளானாலும் அதற்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் 50 பயணிகளின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்களே. அது குறித்து வெட்கமாக இல்லையா?" எனக் கூறினார்.

அந்தப் பயணியின் வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டித்த பிரக்யா, இது தொடர்பாக போபால் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

பிரக்யா முன் பதிவு செய்திருந்த இடத்தில் மருத்துவ அவசர நிலையில் வந்த பயணி அமர வைக்கப்பட்டார். விமானத்தில் மருத்துவ அவசரநிலையில் வருபவர்களுக்கே முன்வரிசையில் அனுமதி அளிக்கப்படும். அதை எதிர்த்தே பிரக்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

SCROLL FOR NEXT