அயோத்தியில் வாழ்ந்த கும்நாமி பாபாதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற சந்தேகத்திற்கு முடிவு கிடைத்துள்ளது. இதன் மீதான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அமைத்த விசாரணை கமிஷன் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18, 1945-ல் நேதாஜி கடைசியாகப் பயணம் செய்த விமானம் தைவானில் விபத்துக்குள்ளானது. அதில் தீக்காயம் அடைந்த நேதாஜி அருகிலுள்ள ஜப்பான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. இதில் அவரது உடலும் கிடைக்காததால், நேதாஜியின் குடும்பத்தினர் அவர் மரணத்தை இன்றுவரை நம்பவில்லை.
இந்நிலையில், அயோத்தியின் ரமாபவனில் வாழ்ந்த சாது தான் நேதாஜி என சந்தேகிக்கப்படுவதாகவும், இதை விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. கும்நாமி பாபா மீது உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேதாஜியின் மகளான லலிதா போஸ் மற்றும் மூத்த மகனான சுரேஷ் சந்திர போஸ் ஆகியோரின் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இதில் கடந்த ஜனவரி 31, 2013-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவில் கும்நாமி பாபாவின் உடைமைகளையும் பாதுகாத்து வைத்து, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும் என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, நீதிபதி விஷ்ணு சஹாய் என்பவர் தலைமையில் ஜூன் 2016-ல் ஒரு விசாரணை கமிஷனை உ.பி. அரசு அமைத்தது. இதன் 350 பக்கங்கள் கொண்ட அறிக்கை, கடந்த செப்டம்பர் 19, 2017-ல் உ.பி. அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது உ.பி. சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இதில், கும்நாமி பாபா என்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதி விஷ்ணு சஹாய் அறிக்கையில், ''கும்நாமி பாபாதான் நேதாஜி என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் நேதாஜியின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். இதை வைத்து அவரே நேதாஜி என அப்பகுதிவாகிகள் தவறாக சந்தேகம் கொண்டு பரப்பி விட்டனர்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய ஆதாரமாக கொல்கத்தாவில் இருந்து கும்நாமி பாபாவிற்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் காட்டப்பட்டுள்ளது. புல்புல் என்பவர் எழுதிய இக்கடிதத்தில், ''என்னிடம் நீங்கள் எப்போது வருகிறீர்கள்? நேதாஜியின் பிறந்த நாளில் வந்தால் நாம் அனைவரும் மிகவும் மகிழ்வோம்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து கும்நாமி பாபாவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் வெவ்வேறு நபர்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேதாஜி மரணத்தின் மர்மத்தை விலக்கவேண்டி மத்திய அரசு சார்பில் இதுவரை, ஷா நவாஸ் விசாரணைக் குழு, கோஸ்லா விசாரணைக் குழு மற்றும் முகர்ஜி விசாரணைக் குழு ஆகியன அமைக்கப்பட்டிருந்தன. இந்த முயற்சியில் பொதுமக்கள் சார்பிலும் 'சுபாஷ் கி கோஜ், ஏக் மஹா அபியான்' எனும் பெயரில் புதிதாக ஒரு தேடுதல் வேட்டை ஜூன் 5, 2015 -ல் தொடங்கியது. இதிலும் இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை.