இந்தியா

பெங்களூருவில் மசூதிக்கு சென்று அமைதிப்படுத்திய காவல் ஆய்வாளர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

இரா.வினோத்

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஒருவர் மசூதிக்கு சென்று வதந்திகளையும், போலியான செய்திகளையும் நம்பி போராட வேண்டாம் என அமைதிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மங்களூரு, பெலகாவி, குல்பர்கா உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மங்களூருவில் தொலைபேசி இணையதள சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட் காவல் நிலைய ஆய்வாளர் ராகவேந்திரா தன் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்று சமரச உரை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அகராவில் உள்ள மசூதிக்கு சென்ற இவர், தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகவேந்திரா, ‘‘இப்போது நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளும், வதந்திகளும் வலம் வருகின்றன. இத்தகைய வதந்திகளையும், போலி செய்திகளையும் யாரும் நம்பி எதிர்வினை ஆற்ற வேண்டாம். யாருக்காவது சந்தேகம் இருந்தால் நேரடியாகவோ, தொலைபேசியிலோ என்னை தொடர்புகொண்டு கேட்கலாம். நான் அளிக்கும் விளக்கம் உங்களுக்கு சரி என்ற தோன்றவில்லை என்றால் போராடுங்கள். போலியான செய்திகளை பரப்பி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்க வேண்டாம். நம் நாட்டில் காலங்காலமாக நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம்.

அதனை யாரும் தயவு செய்து கெடுக்காதீர்கள்''என உரையாற்றினார். இவரது பேச்சைக்கேட்ட அனைவரும், தவறான செய்தியை நம்பி போராட மாட்டோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT