காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி | படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

பண மதிப்பிழப்பில் ஏடிஎம் முன் மக்கள் நின்றதைப் போல் குடியுரிமையை நிரூபிக்க நிற்க வேண்டுமா?- பிரியங்கா காந்தி ஆவேசம்

பிடிஐ

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்க வரிசையில் காத்துக் கிடந்தார்கள். அதுபோல் குடியுரிமையை நிரூபிக்க வரிசையில் நிற்க வேண்டுமா என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம், வன்முறையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு அமைதியாகப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நாடு முழுவதும் மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், போலீஸார் போராடுபவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டுக் கைது செய்கின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகிய இரண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிரானவை. பாபாசாஹேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கமாட்டோம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை மற்றும் வன்முறையின் மூலம் மக்களை வளைக்கிறது.

போராட்டக்காரர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க மகாத்மா காந்தியின் அஹிம்சையையும், உண்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

என்ஆர்சியும், குடியுரிமைத் திருத்தச் சட்டமும் ஏழைகளுக்கு எதிரானது. கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏழைகளை அவர்களின் சொந்தப் பணத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்க வரிசையில் நிற்க வைத்தது மத்திய அரசு. அதேபோல ஏழைகள் என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச்சட்டம் ஆகியவை மூலம் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வரிசையில் நிற்க வைக்க மத்திய அரசு விரும்புகிறது.

ஒவ்வொரு இந்தியரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க இந்தச் சட்டம் காலவரம்பு நிர்ணயித்துள்ளது. அப்போது நாம் செல்லுபடியாகக்கூடிய ஆவணங்களை அளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தால் பெரும்பாலான ஏழைகள், விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சட்டவிரோதமாக மக்களும், மாணவர்களும், சிந்தனை வாதிகளும், சமூக ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பத்தினருக்குக் கூட அரசு தகவல் அளிக்கவில்லை. உத்தரப் பிரதேச அரசு செய்துள்ள இந்தச் செயல் ஜனநாயகத்தில் ஒரு கறுப்பு நாள். தகவல் தொடர்பையும், இணையச் சேவையையும் உ.பி. அரசு துண்டித்துள்ளது.

பெரோசாபாத், அம்ரோஹா, மொராதாபாத், பேரேலி, ராம்பூர், கான்பூர், கோரக்பூர் ஆகிய நகரங்களில் போராட்டம் அமைதியாக நடந்தது. ஆனால், அங்கு போலீஸார் மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்''.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT