கடந்த வியாழன் அன்று சிஏஏவை எதிர்த்துப் போராடிய வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்ட காட்சி | கோப்புப் படம். 
இந்தியா

சிஏஏ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: கைதான ராமச்சந்திர குஹா ட்விட்டர் பதிவு

பிடிஐ

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வியாழன் அன்று பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிஏஏ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா கடந்த வியாழன் அன்று பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ராமச்சந்திர குஹாவை போலீஸார் கைது செய்தனர்.

அவருடன் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்தபோது, ''ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும்போது எதற்காக கைது செய்கிறீர்கள்?'' என்று குஹா கேள்வி எழுப்பினார். எனினும் அதைப் பொருட்படுத்தாமல் போலீஸார் அவரை வேனில் ஏற்றிச் சென்று தடுப்புக் காவலில் வைத்தனர்.

இந்நிலையில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா இதுகுறித்து ட்விட்டர் பதிவில் இன்று கூறியுள்ளதாவது:

''அமைதியான போராட்டத்தைக் கூட காவல்துறை அனுமதிக்கவில்லை என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இது குடிமக்களின் ஜனநாயக உரிமை.

இதில் இரண்டு விஷயங்கள் முற்றிலும் தெளிவாக உள்ளன.

1. என்.ஆர்.சி உடனடியாக திரும்பப் பெறுவது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் தேசத்தைக் குணப்படுத்துவதற்கும் தேவையான முதல் படியாகும்.

2. சிஏஏ நீதிக்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது ஆகும். ஒரு அறிவார்ந்த, நியாயமான அரசாங்கம் இவற்றை திரும்பப் பெறும்''.

இவ்வாறு ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT