இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும், அப்படி என்றால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு ஏன் தரக்கூடாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியதாவது:
‘‘பொருளாதார நசிவு உட்பட நாட்டில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இதனை திசை திருப்பும் வகையில் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் நலனை விரும்பும், ஒற்றுமையை விரும்பும் எவரும் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்க முடியாது.
குடியுரிமைச் சட்டம் நாட்டின் ஒற்றுமையை அழித்து, மதம், மொழி, இனம் என நாட்டை பிளவுபடுத்தும் செயல் இதனை ஏற்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அப்படி என்றால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு ஏன் தரக்கூடாது.’’ எனக் கூறியுள்ளார்.