குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் விடுத்து வரும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. போராட்டம் நடத்தும் மக்கள் மீது போலீஸாரின் அடக்குமுறை ஏவிவிடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்துபோராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சோனியா நேற்று கூறும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டம் தொடர்பான மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் மீது போலீஸாரை விட்டு அடக்குமுறையைக் கையாள்கிறது மத்திய அரசு. ஜனநாயக ஆட்சியில் இதை ஏற்க முடியாது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும். அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. சட்டம் தொடர்பான தங்களது கவலைகளை பதிவு செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது” என்றார். - பிடிஐ