எந்த ஒரு போராட்டத்திலும் வன்முறைக்கு இடமில்லை அதனை நாங்கள் ஏற்கவில்லை, அதேசமயம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியான எங்கள் போராட்டம் தொடரும் என அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி, பிஹார், கர்நாடகா, உ.பி. என பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ஹைதரபாத்தில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டம் குறித்து முஸ்லிம் ஐக்கிய நடவடிக்கை குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘எந்த ஒரு போராட்டத்துக்கும் வன்முறை தீர்வாகாது. குடியுரிமைச் சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதற்கு எதிராக ஜனநாயக ரீதியான எங்கள் போராட்டம் தொடரும். இஸ்லாமிய மக்கள் ஒன்றுபட்டு தங்கள் கோரிக்கை வெல்லும் வரையில் போராட வேண்டும்’’ எனக் கூறினார்.