பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் மற்ற கட்சிகளை போல நாம் செயல்படக்கூடாது. தெருவில் இறங்கி போராடும் சூழல் தற்போது நல்லதல்ல என பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவுரை வழங்கியுள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேச தலைநகர் லக்னோ உட்பட அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது பழைய லக்னோ பகுதியில் ஒரு காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அதன்பிறகும் போராட்டம் நீடித்ததால் போலீ ஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லாலு உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். அங்கு 144 தடை உத் தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டன.
போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி னர். அங்கும் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. வன் முறை ஏற்பட்ட லக்னோ, சம்பல் பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
‘‘நாடுமுழுவதும் தற்போது நெருக்கடி நிலையை போன்ற சூழல் நிலவுகிறது. அதனால் கட்சி தொண்டர்கள் யாரும் தெருவில் இறங்கி போராட வேண்டாம். போராட்டத்தில் வன்முறை எந்தவிதத்திலும் இடமில்லை.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு மற்ற கட்சிகளை போல வன்முறையில் நம்பிக்கையில்லை. பொதுச்சொத்துக்களை சேதம் விளைவிக்கும் மற்ற கட்சிகளை போல நாம் செயல்படக்கூடாது. தெருவில் இறங்கி போராடும் சூழல் தற்போது நல்லதல்ல’’ எனக் கூறினார்.