இந்தியா

மாசடைந்த காற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 35,000 பேர் பலி: மத்திய அரசு

பிடிஐ

கடந்த 10 ஆண்டுகளில் காற்றில் கலந்திருக்கும் அளவுக்கதிகமான மாசு காரணமாக நாட்டில் 35,000 பேர்களுக்கும் அதிகமானோர் மூச்சுக்குழல் நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்களவையில் இன்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது, “மூச்சுக்குழல் மற்றும் இருதய நோய்களை அதிகரிப்பதில் மாசடைந்த காற்று பெரும்பங்கு வகிக்கிறது” என்றார்.

மாசடைந்த காற்றினால் பலியாகும் மனித உயிர்கள் பற்றிய விவரங்களை வெளியிட பொதுவாக தவிர்க்கும் மத்திய அரசு தற்போது 2006-2015-ல் அந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஜவடேகர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளிக்கும் போது, “ஆஸ்துமா, நீண்ட நாளைய நுரையீரல் தடுப்பு நோய், நீண்ட நாளைய மூச்சுக்குழல் அழற்சி நோய் ஆகியவை மாசடைந்த காற்றினால் வருபவை” என்றார்.

கடந்த மே மாதம் உலகச் சுகாதார மையம் தனது அறிக்கையில் மாசடைந்த காற்றுக்கு உலகம் முழுதும் பலியாவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்ததோடு, குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இந்த மரணங்கள் அதிக அளவில் நிகழ்வதாக தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி காற்றில் உள்ள அளவுக்கதிகமான தூசியினால் டெல்லியில் மட்டும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது.

SCROLL FOR NEXT