யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உடலைப் பெற நாக்பூரில் மேமன் குடும்பத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, மேலும் இறுதிச் சடங்கில் மற்றவர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு, யாகூப் விவகாரத்தில் மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டதாக ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியபோது, “ஜனநாயகத்தில் ஒரு அரசு எப்படி செயல்படவேண்டுமோ அப்படியாகவே செயல்பட்டுள்ளது. (தூக்கு தண்டனை நிறைவேற்ற பிறகு) சம்பவம் ஏதாவது நிகழலாம் என்ற நிலை நாட்டில் இருந்தது. நீதித்துறை அதன் கடமையைச் செய்தது. ஆனால், தீர்ப்பினால் எழும் பின்விளைவுகளை கையாளும் கடமை அதற்கு இல்லை. எனவே அரசுதான் அந்தப் பிரச்சினையை கையாள வேண்டும்.
எனவே அரசு, இந்தியத் தன்மையுடன் செயல்பட்டு தூக்கிலிடப்பட்டவரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்தது.
ஆனால் கடந்த ஆட்சியில் இத்தகைய மதிபீடுகள் கடைபிடிக்கப்படவில்லை (அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் குறிப்பிட்டு).
ஜனநாயகத்தில் ஒரு அரசிடம் எதிர்பார்க்கப்படும் மனிதத்தன்மையை 100% மத்திய அரசு காண்பித்துள்ளது. அரசின் இத்தகைய ஜனநாயக வழிமுறையினால்தான் தூக்கு நிறைவேற்றப்பட்ட பிறகு அசம்பாவிதங்கள் நிகழவில்லை.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் இந்தியத் தன்மையின் முழு அறமதிபீடுகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது” என்றார்