இந்தியா

உதம்பூர் தீவிரவாத தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் தீவிரவாதி உஸ்மானிடம் நாளை வாக்குமூலம் பதிவு

பிடிஐ

ஜம்மு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது நவேத் யாகுப் (எ) உஸ்மான் கானை தேசிய புலனாய்வு அமைப்பைச் (என்ஐஏ) சேர்ந்த போலீஸார் நேற்று தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நவேத்திடம் நாளை வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 5-ம் தேதி காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலியாயினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய 2 பேரில் முகமது நோமன் என்ற மொமின் சுட்டுக் கொல்லப்பட்டார். நவேத் உயிருடன் பிடிபட்டார். தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் நவேத் ஸ்ரீநகரில் என்ஐஏ காவலில் வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக தொடரப் பட்டுள்ள வழக்கில், இந்திய தண்டனை சட்டம் 164-வது பிரிவின் கீழ் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக, ஜம்முவில் உள்ள தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நவேத்தை என்ஐஏ போலீஸார் நேற்று காலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நவேத் வாக்குமூலம் தர தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, நவேத் தாமாக முன்வந்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு வசதியாக அவரை 2 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நவேத்திடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக 26-ம் தேதி இந்த வழக்கு விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நவேத்திடம் ஏற்கெனவே நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT