தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் வெளிநாட்டினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய குடியுரிமையை நிரூபிக்க அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை நிரூபிக்க தவறினால் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தடுப்புமையங்களில் அடைக்கப்படுவார்கள்.
இதேபோல சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் நேற்று கூறியபோது, "குடியுரிமை திருத்த சட்டம் மட்டுமல்ல. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் கண்டிப்பாக அமல் செய்யப்படும்" என்று தெரிவித்தார். இந்த திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.