இந்தியா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்: டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 144 தடை உத்தரவு

செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதையடுத்து டெல்லி, அசாம், கர்நாடகா, பிஹார், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. குர்ஹான், காசியாபாத் உட்பட டெல்லியைச் சுற்றியுள்ள பிற மாநில பகுதிகளில இருந்து வாகனங்கள் உள்ளே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டை உட்பட சில இடங்களில் கடுமையான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.பாட்னா உள்ளிட்ட இடங்களில் இடதுசாரி கட்சி தொண்டர்கள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT