நாடாளுமன்ற முடக்கத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நாடாளுமன்றத்தை முடக்கி நாட்டின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல. நாடாளுமன்ற முடக்கத்துக்கு பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியுமே காரணம்.
எல்லாவற்றையும் குறித்து மோடி பேசுகிறார். ஆனால் வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறார். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதில் அவருக்கு துளியும் அக்கறை இல்லை.
ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் தடுப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார். ஜி.எஸ்.டி. மசோதாவை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். காங்கிரஸ் ஆட்சியில் அந்த மசோதாவை கொண்டு வந்தபோது பாஜக மூத்த தலைவர்களும் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கடுமையாக எதிர்த்தனர்.
மக்களவை, மாநிலங்களவை யில் சுஷ்மாவும் அருண் ஜேட்லியும் ஆக்ரோஷமாக பேசினர். ஜி.எஸ்.டி மட்டுமல்ல, காப்பீடு மசோதா, சுரங்க மசோதா, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், சில்லறை வர்த்தகம் மற்றும் விமான போக்குவரத்து துறையில் அந்நிய முதலீடு என அனைத்தையும் பாஜக எதிர்த்தது. அப்போது நாட்டின் வளர்ச்சியை தடுத்தது யார்?
காங்கிரஸ் முதிர்ச்சி பெற்ற கட்சி. பாஜகவை போல நாங்கள் நடந்து கொள்ளவில்லை. அதனால்தான் காப்பீடு மசோதா, சுரங்க மசோதா, வங்கதேச எல்லை வரையறை மசோதா ஆகியவை தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி மசோதாவில் நாடாளுமன்ற மரபுகள், சட்டவிதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். மசோதா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை அரசு கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.