இந்தியா

நாடாளுமன்ற துளிகள்

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு கேள்விகள் மற்றும் விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்படும். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.26 கோடியில் இருந்து 43.53 லட்சமாக குறைந்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கை முறையாக தாக்கல் செய்யாத 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இப்போது தவறு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2013-14-ல் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 414 ஆகவும், 2012-13-ல் இந்த எண்ணிக்கை 1,837 ஆகவும் இருந்தது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:

பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் விமான நிலையங்களை பயன்படுத்தியதற்காக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு கட்டணம் ரூ.2,739 கோடியை பாக்கி வைத்துள்ளன. இதில் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.1,963 கோடி தர வேண்டும். இவை தவிர ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஜெட் லைட் (இந்தியா), இண்டிகோ, கோ ஏர் உள்ளிட்டவையும் பாக்கி வைத்துள்ளன. இத்தொகையை வட்டியுடன் வசூலிக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முயற்சி எடுத்து வருகிறது.

ரயில்வே இணையமைச்சர் மகேஷ் சின்ஹா:

ரயில்களில் எலித் தொல்லை தொடர்பாக அதிகமாக புகார்கள் வருவது உண்மைதான். இந்த பிரச்சினையைத் தீர்க்க ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பெட்டியில் இருந்துதான் மற்ற பெட்டிகளுக்கு எலிகள் வருகின்றன என்பதால் அந்த பெட்டியை மட்டும் தனியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் ரயில்வே அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

சாலை போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்:

முக்கிய சுற்றுலா மையங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்க ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடி செலவில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல்:

நாட்டில் மின் உற்பத்தியை பெருக்க மத்திய மின்துறை ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 200 இடங்களில் அனல் மின்நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான்:

கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 10 மடங்கு அதிகரித்து ரூ. 6,473.22 கோடியை எட்டியுள்ளது.

SCROLL FOR NEXT