இந்தியா

சசிதரூருக்கு சாகித்ய அகாடமி விருது: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை பற்றிய நூல்

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். வெளியுறவுத்துறை அரசு பணியில் நீண்ட அனுபவம் கொண்ட அவர் கேரள மாநிலத்தை பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை பற்றி ஆங்கிலத்தில் அவர் எழுதிய ‘ஆன் எரா ஆப் டார்க்னஸ்’ (ஒரு இருண்ட காலம்) புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் தர்க்க வாதங்களுடன் அவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் நிறுவியுள்ளார்.

பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசு, ஆங்கில மொழி, ரயில்வே, நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் ஏற்க மறுத்து அதற்கான வாதங்களையும் அவர் முன் வைக்கிறார்.

இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் இழைத்த அநீதியைத் தகுந்த சான்றுகளுடன் விளக்கியுள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த நூல் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


இந்த புத்தகத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான கதைகள் அல்லாத பிரிவின் கீழ் ஆங்கில புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், பட்டயமும் கொண்ட இந்த பரிசு வரும் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி வழங்கப்படும் என சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனவாசராவ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT