டெல்லி சீலம்பூரில் நேற்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்த காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: மத்திய உள்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை

ஐஏஎன்எஸ்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் போராட்டம் வரும் நாட்களில் மோசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய உள்துறைக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் எதிரொலியாக டெல்லியில் கடந்த இரு நாட்களாகப் போராட்டத்தில் 100 தனியார் வாகனங்கள், 10 போலீஸார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை அனுப்பிய தகவலில் வரும் நாட்களில் போராட்டம் டெல்லியில் தீவிரமடையலாம், நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், " குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தோடு இனிமேல் நிற்காது. டெல்லி முழுவதும் பரவும், குறிப்பாக முஸ்லி்ம் மக்கள் இருக்கும் பகுதிகளில் போராட்டம் பரவும்.

குறிப்பாக திரிலோகபுரி, ஒக்லா சந்த் பாக், கர்வால் நகர், ஜம்மா மஸ்ஜித் ஆகிய பகுதிகளில் போலீஸார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். அதேபோல முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். மக்கள் ஒன்றாகக் கூடவும், நகரவும் தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல்ரீதியாக தங்களுக்கு ஆதரவு திரட்ட மக்கள் இனிமேல் நகரத் தொடங்குவார்கள். முஸ்லிம் மதகுருமார்கள் தவறான செய்திகளை, போலிச்செய்திகளை பரப்பக் கூடாது என்று அறிவுறுத்தி, ஆத்திரமூட்டும் கருத்துக்களை யாரேனும் பேசுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதவிர டெல்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தில் நிலையற்ற தன்மையில்லாமல் ஸ்திரப்படுத்த வேண்டும் என்று உள்துறைக்கு உளவுத்துறை தெரிவித்துள்ளது.டெல்லி சீலம்பூர் பகுதியில் மக்கள் ஒன்று திரளச் சாத்தியம் இருக்கிறது போலீஸார் கவனத்துடன் இருக்கவேண்டும் என்ற உளவுத்துறை முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால், போலீஸார் கவனக்குறைவாக இருந்ததால், சீலம்பூர் பகுதியில் நேற்று மக்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.

ஆனால், தங்களுக்கு எந்தவிதமான தகவலையும் உளவுத்துறை அறிவிக்கவில்லை. சீலம்பூர் பகுதியில் மக்கள் திடீரென ஒன்று திரண்டுவிட்டனர் என்று போலீஸ் அதிகாரிகள் உள்துறைக்குத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT