இந்தியா

குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு: குடியரசுத் தலைவரை தனியாக சந்தித்த பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள்

செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, ஐயுஎம்எல், ஏஐயுடிஎப் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் நேற்று பேசினார்கள்.

அப்போது, சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு அறிவுறுத்தவும், கலவரம், வன்முறையில் தலையிட்டுக் கட்டுப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான குழுவில் பகுஜன் சமாஜ் கட்சி இணையவில்லை. இந்தநிலையில் அந்த கட்சி எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தனியாக சந்தித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதிஷ் சந்திரா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியல் அமைப்புச் சட்ட பிரிவுகளுக்கு எதிராக குடியுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. நமது நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. எனவே இதனை ஏற்க முடியாது. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தினோம்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT