மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்துவோரை சுட்டுத் தள்ளுங்கள்: அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் அறிவுறுத்தல்

ஏஎன்ஐ

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் வலுத்துள்ள நிலையில், ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்துவோரை, பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ளுங்கள் என்று ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் பல ரயில் நிலையங்கள், ரயில்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக கிழக்கு மண்டல ரயில்வே கடந்த சில நாட்களாக ரயில் போக்குவரத்தைப் பல நகரங்களுக்கு நிறுத்தியது. போராட்டக்காரர்கள் ரயில்களைச் சேதப்படுத்துவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றுகூட 19 ரயில்களைக் கிழக்கு மண்டல ரயில்வே ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் ஹூப்ளி நகரில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ரயில்வே சொத்துகளுக்குப் போராட்டத்தின்போது சேதம் விளைவிப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் சுரேஷ் அங்காடி அளித்த பதிலில், "ரயில்வே சொத்துகளை மட்டுமல்ல, பொதுச் சொத்துகளை யார் சேதப்படுத்தினாலும் பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ளுங்கள் என்று மாவட்ட நிர்வாகத்துக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

ரயில் என்பது வரி செலுத்துவோரின் பணத்தில் உருவானது. ஒரு ரயிலை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். யாரேனும் கல் வீசி எறிந்தால், அந்த நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசு கடுமையான நடவடிக்கையை வல்லபாய் படேல் போல் எடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள், சமூக விரோதிகள் தேவையில்லாமல் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT