குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வன்முறை செய்வோரை அவர்களது ‘உடைகளை வைத்து அடையாளம் காண்போம்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“உடையை வைத்து ஒருவரை அடையாளம் காண்போம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது”, என்று மே.வ.முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
தெற்கு கொல்கத்தாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான 2ம் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி கூட்டத்தினரை நோக்கி உங்கள் ஆடைகளை வைத்து உங்களை அடையாளம் காண்பது சரியா என்று கேட்டார்.
இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் பிரபல வங்காள நடிகர் சோஹம், எம்.பியும் நடிகருமான மிமி சக்ரவர்த்தி, நஸ்ரத் ஜஹான், இயக்குநர் கவுதம் கோஷ் ஆகியோர் மேடையில் இருந்தனர்.
முஸ்லிம்களைக் குறிப்பிட்டு மம்தா பேசுகையில், “ஒருவருடைய ஆடையை வைத்து அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று கூற முடியுமா? எந்த ஒருவரது உடையை வைத்தும் இத்தகைய கருத்தை ஒருவர் தெரிவிக்க முடியுமா? புடவையை வைத்து நல்லது கெட்டதை தீர்மானிக்க முடியுமா? ஒருவர் அணிந்திருக்கும் தொப்பி வகையை வைத்து அவர்கள் உடையையே உங்களால் யோசிக்க முடியுமா?
இது நம் உடை அது அவர்கள் உடை, இது நம் உணவு, அது அவர்கள் உணவு... இது எப்போது நம் நாட்டுக்கு வந்தது? பஞ்சாபிய சகோதரர்கள் டர்பன் அணிகின்றனர், கிறிஸ்துவ மதகுருமார்களுக்கு ஆடை பற்றிய விதிமுறை உள்ளது. இவர்களை நாம் அவர்களது உணவு மற்றும் உடையைக் கொண்டு ஆராய முடியுமா? இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து கழுத்தில் அணியும் தூண்டு காவியாக இருக்க வேண்டும் என்று வந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் நாம் விரும்புவதா?
இயக்கங்கள், சிறுபான்மையினர் நலன்களைப் பேசும்போதும், சிறுபான்மையினர் பெரும்பான்மை நலன்களைப் பேசும்போதும் பெரும்பான்மை சிறுபான்மை நலன்களைப் பேசும்போதும் ஜனநாயக இயக்கங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. இந்த ஊரிலேயே பிறந்து, இந்த ஊரிலேயே வளர்ந்து, படித்து, நாடாளுமன்றத்துக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டு, இதே நகரத்தில் தெருவில் அடிவாங்கியது போக இப்போது என் தாயாரின் பிறந்த தேதியைக் கேட்கின்றனர். அது எனக்குத் தெரியாது. ஏதாவது ஒரு தேதியைக் கொடுங்கள் என்று சிலர் என்னிடம் கூறினர். நான் எதற்காக அப்படியெல்லாம் செய்ய வேண்டும், நான் எதற்காக என் தாயார் பிறந்த தேதியை அளிக்க வேண்டும்? பிறந்தநாள் தெரியவில்லை என்றால் தெரியவில்லை அவ்வளவுதான். என் தாயார் பிறந்த போது அடையாளப்படுத்தக்கூடிய மகப்பேறு நிலையங்களெல்லாம் இல்லை ஆகவே தேதியெல்லாம் தெரியாது.
அவர் இறந்த தேதி தெரியும்... அது இன்றைய தேதிதான். ஆனால் பிறந்த தேதி இல்லை, தெரியவில்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.