இந்தியா

‘‘காங்கிரஸ் செய்தது போல நெருக்கடி நிலையை கொண்டு வந்து விடாதீர்கள்’’ - மத்திய அரசுக்கு மாயாவதி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

காங்கிரஸ் ஒரு காலத்தில் கொண்டு வந்த நெருக்கடியை நிலையை போன்ற சூழலை மத்திய அரசு உருவாக்கக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இதனால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளாவிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாயாவதி கூறியதாவது:

‘‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் சட்டத்துக்கு எதிராக இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டத்தை அனுமதித்தால் எதிர்காலத்தில் எதிர்மறையான நிகழ்வுகளே ஏற்படும். இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் ஒரு காலத்தில் கொண்டு வந்த நெருக்கடியை நிலையை போன்ற சூழலை மத்திய அரசு உருவாக்கக் கூடாது’’ எனக் கூறனார்.

SCROLL FOR NEXT