குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியனவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) எச்சரிக்கையை மீறி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காததால் போராட்டம் பெரியளவில் வேகமெடுக்கவில்லை.
முன்னதாக நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கேரளாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த கேரள முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமைப்பு, எஸ்.டி.பி.ஐ., சமூகநலக் கட்சி உள்ளிட்ட 33 அமைப்புகள் இந்த முழுஅடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது இஸ்லாமியர்களின் பிரச்சினை மட்டுமல்ல என்று கூறி ஒதுங்கிக் கொண்டன.
இந்நிலையில் மாநில பாஜக இந்தப் போராட்டம் தேவையற்றது என்றும் தேச நலனுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள போலீஸ் டிஜிபி ஜீவன் பாபு கூறுகையில், "இன்று பள்ளி, கல்லூரி தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும். அரசு அலுவலகங்கள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படாததால் போராட்டத்தை கைவிட வேண்டும். இதனையொட்டி சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி போரட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை பாயும்" என எச்சரித்துள்ளார்.
இன்றைய போராட்டத்திற்கு கேரள வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவிக்காத நிலையில் ஆங்காங்கே சில கடைகள் திறந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்தும் ஓரளவுக்கு சீராகவே உள்ளது. பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்குகின்றன.