இந்தியா

‘‘நேரில் வந்து விளக்கமளியுங்கள்’’ - மம்தா பானர்ஜிக்கு மேற்குவங்க ஆளுநர் உத்தரவு

செய்திப்பிரிவு

மேற்குவங்க மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து நாளை வசதியான நேரத்தில் ராஜ்பவனுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜியை கோரியுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் பெருமளவு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ரயில் நிலையம், தபால் நிலையம் உட்பட மத்திய அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. தீ வைப்புச் சம்பவமும் நடந்தது.

இதையடுத்து அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஜகதீப் தன்கர் நேற்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அவர்கள் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் வந்து சந்திக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்குவங்க மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘இது துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதது.
மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து நாளை வசதியான நேரத்தில் ராஜ்பவனுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜியை கோரியுள்ளேன். மாநில தலைமைச் செயலாளரையும், காவல்துறை தலைவரையும் அழைத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. இது இது துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதது.’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT