குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து வன்முறைகளும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், உ.பி, உள்ளிட்டவற்றில் போராட்டம் நடந்து வருகிறது.
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள், காங்கிரஸ் மாணவர் தேசியக் கூட்டமைப்பு கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீஸார், மாணவர்கள், தீத்தடுப்புப் படையினர் என 60 பேர் காயமடைந்தனர்.
தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசிய கூட்டத்தினரை போலீஸார் கலைத்தனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், கலவரம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சிகள் இருந்தன. மேலும், காயமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக கழிவறையில் மறைந்த அவர்களை சக மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தெற்கு டெல்லியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "டெல்லியில் உள்ள சட்டம் ஒழுங்கு சூழலைப் பார்த்து எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. டெல்லியில் உடனடியாக அமைதி திரும்பவேண்டும். டெல்லியில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க இருக்கிறேன். அதற்காக நேரம் கேட்டுள்ளேன் " எனத் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், " ஜனநாயக முறையில் போராடுங்கள், வன்முறையில் ஈடுபடாதீர்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஜாமியா பல்கலை.யில் போலீஸார் நடந்த முறை கண்டிக்கத்தக்கது. அமித் ஷா உள்துறை அமைச்சராக வந்த பின்புதான் போலீஸாரின் இந்தத் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதுதான் டெல்லி போலீஸாரின் உண்மை முகம்" எனத் தெரிவித்தார்.