இந்தியா

மாணவர் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்ட்கள்: எச்சரிக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிடிஐ

மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் ஜிஹாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாவோயிஸ்ட்டுகளும், பிரிவினைவாதிகளும் ஊடுருவுவதாக எச்சரிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இது கலவரமாக மாறியது. மாணவர்கள் மீது போலீஸார் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தப் போராட்டம் வருத்தமளிப்பதாகவும் யாரும் சிலர் சுயலாபத்துக்காக ஏற்படுத்தும் பிளவை அனுமதிக்க இயலாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் ஜிஹாதிகளும், மாவோயிஸ்ட்டுகளும், பிரிவினைவாதிகளும் ஊடுருவுவது குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், மக்களின் உணர்வுகளை இவ்வாறு தூண்டிவிடுவது எதிர்க்கட்சியின் விரக்தியையே காட்டுகிறது.

இது போன்ற போராட்டங்கள் பல்கலைக்கழகங்களுக்குப் புதிதல்ல. மாணவர்கள் அவர்களின் வயதின் காரணமாக இதுபோன்ற கொள்கைகளின்பால் ஈர்க்கப்படுகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT