பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் வரும் 18-ம் தேதி விசாரணை

பிடிஐ

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி, திரிபுரா மன்னர் உள்பட 12-க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் தாக்கலாகியுள்ள நிலையில் அவை வரும் 18-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது. இதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் , அனைத்து இந்திய அசாம் மாணவர்கள் அமைப்பு (ஏஏஎஸ்யு), பீஸ் பார்ட்டி, தொண்டு நிறுவனமான ரிஹாய் மாஞ்ச் அன்ட் சிட்டிஸன்ஸ் அகைன்ட் ஹேட் , வழக்கறிஞர் எம்.எல் சர்மா, சட்டக்கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையே திரிபுரா மன்னர் வம்சமான திரபுரா பிரத்யோத் கிஷோர் தேவ் வர்மன் சார்பிலும் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வீ, அவசர வழக்காகக் கருதி திரிபுரா மன்னர் மனுவை விசாரணைக்கு எடுக்க, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிடம் கோரினார்.

ஆனால், தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு ஏற்க முடியாது. ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களோடு சேர்த்து வரும் 18-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "அவசர சூழல் கருதி நான் கடந்த 13-ம் தேதி குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை இன்று அணுகினேன். ஆனால், நீதிபதிகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் புதன்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தார்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT