மத்திய தகவல் ஆணையத்திலும், மாநிலங்களில் உள்ள தகவல் ஆணையத்திலும் ஆணையர்களை அடுத்த 3 மாதங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும் தகவல் உரிமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில் சில நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தார்
மத்திய தகவல் ஆணையத்திலும், மாநிலங்களில் உள்ள தலைமை ஆணைய அலுவலகங்களிலும் ஆணையர்களை வெளிப்படையான முறையில் நியமிக்கக் கோரி அஞ்சலி பரத்வாஜ் என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் விரைவாக ஆணையர்களை நியமிக்க உத்தரவிட்டு இருந்தது. ஆனால், பல மாநிலங்களும், மத்திய அரசும் இதை நிறைவேற்றவில்லை.
இதைச் சுட்டிக்காட்டி மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்ய காந்த் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்ய காந்த் ஆகியோர் கூறுகையில், "ஏராளமானோர் தகவல் உரிமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் அந்தத் தகவல் பெறுவதற்கும் எந்தவிதமான தகவலும் இல்லை என்றபோதிலும் அதைப் பெற்று மிரட்டலில் ஈடுபடுகிறார்கள். இதை ஒழுங்குபடுத்த நெறிமுறைகள் அவசியம் என்று கருதுகிறோம்.
அதேசமயம் நாங்கள் தகவல் உரிமைச் சட்டத்துக்கு விரோதமானவர்களும் அல்ல. இதை முறைப்படுத்த சில விதிமுறைகள் அவசியம் என்று கருதுகிறோம்.
அடுத்த இரு வாரங்களுக்குள் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணையதளத்தில் ஆணையர்கள் தேடுதல் குழு உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்குள் மாநிலங்களில் உள்ள தலைமை ஆணையர் பதவியிடங்கள், மத்திய தகவல் ஆணையர் பதவியிடம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்" என உத்தரவிட்டனர்.