இந்தியா

பெண் சாமியார் மீது வரதட்சணை புகார்

ஐஏஎன்எஸ், பிடிஐ

பிரபல பெண் சாமியார் ராதே மா மீது வரதட்சணை புகார் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன.

ராதே மா மற்றும் அவரது உறவினர்கள் மீது 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வரதட்சணை கேட்டு தன்னை உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ராதே மா மற்றும் அவரது உறவினர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தி திரைப்பட உலகினர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் சுபாஷ் கை தனது பேஸ்புக் பக்கத்தில், "நானும் எனது மனைவியும் அவரின் பக்தர்கள். அவர் மிகவும் அன்பானவர். ஒருபோதும் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரிஷி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவே விழித்துக்கொள்! உன்னுடைய அறியாமையை இதுபோன்ற நடிகர்கள் சுரண்டுகின்றனர். நானும் நடிகன்தான். ஆனால் நான் ஏமாற்றமாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், ராதே மாவின் உறவினர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்த பிறகே அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய முடியும் என்று மும்பை பொரிவாலி பகுதி காவல் நிலையத்தின் உயர் அதிகாரி முகுந்த் பவார் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT