வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் ஆம் ஆத்மி கைகோத்துள்ளது.
இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐபேக் நிறுவனம் எங்களுடன் இணைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். வரவேற்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் 'ஐ பேக்' நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
முதன்முதலாக 2012-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போதுதான் பிரசாந்த் கிஷோர் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். காரணம் அந்தத் தேர்தலில் 3-வது முறையாக மோடி முதல்வரானார்.
மோடியின் ஆட்சிக்கு எதிராக நிலவிய அதிருப்தியை அலையை மீறி மோடியை வெற்றிபெறச் செய்ததில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றினார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் பிரசாந்த் கிஷோர் பாஜகவுடன் மக்களவைத் தேர்தலிலும் இணைந்து செயல்பட்டார்.
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, ஆட்சியைக் கைப்பற்ற முக்கிய காரணமாக பிரசாந்த் கிஷோரின் திட்டங்களும் வியூகங்களும் இருந்தது.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து பிஹாரில் நிதிஷ் குமார் ஆட்சி அமைவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.
அண்மையில், பிரசாந்த் கிஷோரின் திட்டங்களால் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார்.
தமிழகத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை தமிழக அரசியல் கட்சிகள் அணுகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் ஆம் ஆத்மி கைகோத்துள்ளது.