மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா மிகவும் ஆபத்தானது என நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா எச்சரித்துள்ளார்.
தனிநபர் தகவல்களையும், தன்மறைப்பு நிலையையும் (பிரை வசி) பாதுகாக்கும் வகையில் பிரத்யேக மசோதாவை உருவாக்கு வதற்காக மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக் கப்பட்ட இந்தக் குழுவானது, இதற்கான வரைவு மசோதாவை தயாரித்து கொடுத்தது.
இந்நிலையில், இந்த மசோதா வானது மக்களவையில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், தனிநபர் தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவானது, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா ஆபத் தானது என அதனை வடிவமைத்த குழுவின் தலைவரான நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்தி ருக்கிறார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தன் மறைப்பு (பிரைவசி) என்பது மக்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக் கிறது. அந்த தீர்ப்புக்கு இணங்கியே இந்த வரைவு மசோதாவை நாங்கள் உருவாக்கினோம். ஆனால், மத்திய அரசு அந்த மசோதாவில் தற்போது மாற்றம் செய்திருக்கிறது.
மத்திய அரசின் நிறுவனங்கள் தனிநபர் தகவல்களை பெறுவதற் கும், அதனை ஆய்வு செய்வதற்கும் வரைவு மசோதாவில் சில கட்டுப் பாடுகளை நாங்கள் கொண்டு வந் தோம். ஆனால், அந்தக் கட்டுப்பாடு களை மத்திய அரசு நீக்கியிருக் கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று.
இதன் மூலமாக, இறை யாண்மை என்ற பெயரில் எந்த நபரின் அல்லது நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை வேண்டு மானாலும் அரசால் பெற்றுக் கொள்ள முடியும். இதனை அனுமதித்தால் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
நல்ல செய்தி என்னவென்றால், இப்போது அந்த மசோதா நாடாளு மன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள் ளது என்பதுதான். மசோதாவில் மத்திய அரசு செய்திருக்கும் மாற்றங் களை சரிசெய்ய அக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, தனிநபர் தகவல்களை பெறும் வழிமுறை என்பது நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இருக்க வேண்டும். இவ்வாறு பி.என். ஸ்ரீ கிருஷ்ணா கூறியுள்ளார்.
எம்.பி.க்கள் விவரம்
இந்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மக்களவையிலிருந்து மீனாட்சி லேகி, எஸ்.எஸ். அலுவாலியா, பி.பி. சவுத்ரி, சஞ்சய் ஜெய்ஸ்வால், ராஜ்யவர்தன் ரத்தோர், கிரீத் சோலாங்கி, தேஜஸ்வி சூர்யா, ராஜீவ் ராஜன் சிங், அஜய் பட், ஸ்ரீகாரந்த் ஷிண்டே, கனிமொழி, சவுகாதா ராய், எஸ். ஜோதிமணி, கவுரவ் கோகோய் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையிலிருந்து பூபேந்தர் யாதவ், சுரேஷ்பிரபு, அஸ்வின் வைஷ்ணவ், ஜெய்ராம் ரமேஷ், விவேக்தங்கா, டெரெக் ஒ பிரையன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.