ஆந்திர மாநிலத்தில் இனி பெண்களிடம் தவறாக நடந்தால் 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி, 21 நாட்களில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கும் சட்டமான ‘திஷா’ பெண்கள் பாதுகாப்பு சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி (28) கொலை சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர அரசு இந்த சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இச்சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட் களுக்குள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும். இந்த ‘திஷா’ சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
இதுதவிர, சிறுமிகள், பெண்கள் மீதான வன்கொடுமை, பாலியல் தொல்லை போன்றவை குறித்து விசாரணை நடத்த தனி விரைவு நீதிமன்றம் அமைக்கவும் ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது. சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவுப்படுத்தினால் கூட2 அல்லது 4 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த திஷா சட்டத்திற்கு நேற்று ஆந்திர அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்குள் ஒருவர் கைது
‘திஷா’ சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், குண்டூரில் உள்ள ராமிரெட்டி நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை இன்டர்மீடியட் (பிளஸ் 2) படிக்கும் லட்சுமண ரெட்டி எனும் மாணவன் பலவந்தமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர், குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து லட்சுமண ரெட்டியை கைது செய்துள்ளனர். விசாரணையில், லட்சுமண ரெட்டி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது திஷா சட்டம் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.