காவேரி நதியை சுத்தம் செய்யவும், மேட்டூர்-காவேரி நீரேற்று திட்டத்தை நிறைவேற்றவும், கோதாவரி-காவேரி நதிநீர் இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தி உள்ளது. இதற்காக மத்திய நீர்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத்திடம், அக்கட்சியின் சேலம் எம்.பியான எஸ்.ஆர் பார்த்திபன் இன்று மனு அளித்தார்.
நேரின் சந்தித்து அமைச்சர் ஷெகாவாத்திடம் அளித்த கடிதத்தில் திமுக எம்.பியான எஸ்.ஆர்.பார்த்திபன் குறிப்பிட்டிருப்பதாவது: கங்கை நதியை பாதுகாக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு பிரதமர் ’நமாமி கங்கா’ என்ற திட்டத்தை அமல்படுத்தினார். இதை நான் வரவேற்கிறேன்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆற்றுப்படுக்கையை சுத்தப்படுத்துவதே ஆகும். நம் நாட்டில் ஆண்டுதோறும் 4.5 லட்சம் கன அடி நீர் கடலில் வீணாக கலக்கிறது.
கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் வறட்சியான பருவமழையை மட்டுமே நம்பியுள்ள விவசாய மக்களுக்கு பயனாக அமையும். முன்னாள் முதல்வர் கலைஞர் நதி இணைப்பு கோரி வழக்கு தொடர்ந்து மேலும் தேசிய அபிவிருத்தி கூட்டத்திலும் இந்த கோரிக்கையை எழுப்பினார்.
ஆறுகளை ஒன்றோடொன்று இணைக்கும்,நோக்கில் மத்திய அரசு ஏற்கனவே குறிப்பிட்டிருந்த கோதாவரி-காவேரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தவும், தேவையான நிதியை ஒதுக்கவும் வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்கள் காவிரியை நம்பியே உள்ளது. மேலும் தற்போது அரசின் கவனக் குறைவினால் காவேரி நதி வேகமாக மாசடைந்து வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரில் பல ஆலைகள் மற்றும் வீடுகளிலிருந்து சுமார் 14.20 லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலக்கிறது. காவேரி படுக்கைகள் மட்டுமின்றி அதன் நீர்வரத்டங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற தனியாக நிபுணர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். எனது சேலம் மாவட்ட மேட்டூர் அணையில் 120 டிஎம்சி தண்ணீர் இருந்தும் மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
சேலம் மாவட்ட தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க ஒரே நடவடிக்கை நதி நீர் இணைப்பு திட்டமாகும். எனவே கங்கை நதியை சுத்தபடுத்தும் திட்டத்தை போல் காவேரி நதியையும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை அரசு போர்க்கால அடிப்படையில் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.