இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டம்;  பழங்குடி மக்களுக்கு பெரும் ஆபத்து: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா ஏமாற்றம்

செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்தச் சட்டம் பழங்குடி மக்களுக்குப் பெரும் ஆபத்தானது என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஹம்ரோ சிக்கிம் கட்சியின் நிறுவனருமான பூட்டியா ஏஎன் ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். திருத்தப்பட்ட மசோதாவில் சிக்கிம் பெயர் இடம் பெறவில்லை. இந்த மசோதாவிலிருந்து எங்களுக்கும் எழுத்துபூர்வமாக விலக்கு அளிக்கப்படுவதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், மசோதாவில் இது குறிப்பிடப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதனை அரசாங்கம் மீண்டும் மறுபரீசிலனை செய்யும் என்று நான் நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்துக் கூறும்போது, “நாங்களும் எங்கள் கலாச்சாரத்தைக் காக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். இன்று சிக்கிமில் அதிக அளவிலான அகதிகள் உட்புகுந்துள்ளனர். இதனை அசாம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடி மக்களுடன் நான் தொடர்ப்புபடுத்த முடியும். நாங்கள் 1975-ல் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்த போது இங்கு 50% பழங்குடி மக்கள் இருந்தனர். தற்போது அவர்களின் இருப்பு 20% ஆக உள்ளது.

மேலும், இனி மற்றொரு பெரிய எண்ணிக்கையில் வெளி மக்கள் சிக்கிமில் நுழைவார்கள். இதனால் பழங்குடிகளின் எண்ணிக்கை மேலும் குறையும். இது ஆபத்தானது” என்று பாய்சங் பூட்டியா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT