இந்தியாவில் புதிதாக அச்சடிக்கப்படும் பாஸ்போர்ட்டுகளில் தாமரை மலர் அச்சிடப்படுவதாக வெளியான ஊடகச் செய்தி குறித்த எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
முன்னதாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விநியோகிக்க அச்சடிக்கப்பட்ட பாஸ்போர்ட்களில் தாமரைச் சின்னம் அச்சடிக்கப்பட்டதாக அம்மாநில பத்திரிகைகளில் செய்திகள் வெளியின.
இதனை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம்.பி., எம்.கே.ராகவன் பூஜ்ய நேரத்தில் கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், "இனி புதிதாக அச்சடிக்கப்படவுள்ள பாஸ்போர்ட்டுகளில் தாமரைச் சின்னமும் சேர்த்து அச்சடிக்கப்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது இந்திய அரசுத் துறைக்கு மதச்சாயம் பூசும் செயல். மேலும், தாமரை பாஜகவின் தேர்தல் சின்னமும்கூட" என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், "தாமரை மலர் நமது தேசிய மலர். அதனாலேயே தாமரைச் சின்னத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பாஸ்போர்ட்களில் போலியை தடுக்க கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இதனைச் சேர்த்துள்ளோம். சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் (Civil Aviation Organization -ICAO) வரைமுறைகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தாமரை தவிர சுழற்சி முறையில் நம் நாட்டின் மற்ற தேசிய அடையாளங்களும் பயன்படுத்தப்படும். இந்த மாதம் தாமரையைப் பயன்படுத்துகிறோம். அடுத்த மாதம் புதிதாக வேறு பயன்படுத்துவோம்" என்றார்.