இந்தியா

வேலைவாய்ப்பின் பெயரில் தமிழக இளைஞர்களுக்கு மோசடி கும்பல் குறி: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக மக்களவையில் புகார் எழுந்தது. இதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.

இதுகுறித்து மக்களவையில் இன்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கூறியதாவது:

''அண்மையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு தேர்வுகளில் ஊழல் நடந்த செய்தியும், அதில் பிரதமர் அலுவலகம் தலையிட்ட செய்தியும் வெளியானது.

இப்போது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் குறிவைத்து ஒரு மோசடி கும்பல் புறப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் ஒரு லட்சம் இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்தின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இளைஞர்களையும், கல்லூரிகளை மாணவர்களையும் குறிவைத்து ஒரு கும்பல் சென்று, ‘நாங்கள் முக்கியமான நிறுவனங்களில் இருந்து வருகிறோம். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப் போகிறோம்’ என்று சொல்லி குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாசிட்டாக ஒரு வங்கிக் கணக்கில் கட்டச் சொல்கிறார்கள்.

ஓய்வு பெற்றவர்களுக்கு கூட சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அவர்கள் சொல்லி டெபாட்சிட் வசூலிக்கிறார்கள். இளைஞர்கள் ஏற்கெனவே வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களின் கல்விக் கடனையே திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் நிதிச் சுமையில் இருக்கின்றன.

இந்த நிலையில் இப்படிப்பட்ட மோசடி கும்பல் வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளைஞர்களிடம் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். காவல் துறையில் கூட வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக அவர்கள் வசூலில் ஈடுபட்டுள்ளனர். செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளார்கள். இவர்களுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொண்டிருக்காமல், இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்''.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT