இந்தியா

அயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செய்திப்பிரிவு

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்தனர்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலானா மக்புசூர் ரஹ்மான், மிஷ்பாஹுத்தீன், முகமது உமர் மற்றும் ஹாஜி நஹூப் ஆகியோர் தனித்தனியாக 5 சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு அளித்துள்ளது. அடுத்தது 6-வது நபராக முகமது அயூப் என்பவரும் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

மூல மனுதாதரர் சித்திக் சார்பில் மவுலானா சயத் ஆசாத் ரஷித் என்பவரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதை எதிர்த்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப், பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக், சமூக ஆர்வலர்கள் ஹர்ஸ் மந்தர், நந்தினி சுந்தர், ஜான் தயால் உள்ளிட்ட 40 பேர் சேர்ந்து தனியாக ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

பல்வேறு தரப்பினரும் மொத்தமாக 17 சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

SCROLL FOR NEXT