ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றியது துணிச்சலான முடிவு: மோடி, அமித் ஷாவுக்கு ஆர்எஸ்எஸ் பாராட்டு

பிடிஐ

குடியுரிமைத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது மிகவும் துணிச்சலான முடிவு. இதை நிறைவேற்றிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்குப் பாராட்டுகள் என்று ஆர்எஸ்எஸ் புகழாரம் சூட்டியுள்ளது.

குடியுரிமைத் திருத்த மசோதாவை நேற்று முன்தினம் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். 7 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப் பின் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்து நிறைவேற்றினர்.

இதையடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மீது காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிராகப் பேசின. அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்குப் பின் நடநத் வாக்கெடுப்பில் இம்மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.க்கள் வாக்களித்து நிறைவேற்றினர். எதிராக 105 வாக்குகள் பதிவாகின.

இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தீர்மானம் கொண்டுவந்தன. இதற்காக நடந்த ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 99 எம்.பி.க்களும், எதிர்பாக 124 எம்.பி.க்களும் வாக்களிக்க பெரும்பான்மை கிடைக்காததையடுத்து இத்தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி நாக்பூரில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''குடியுரிமைத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது துணிச்சலான நடவடிக்கை. இந்த மசோதாவை நிறைவேற்றியதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதற்கான நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போதும் இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கும். மற்றொரு நாட்டில் இருந்து ஒரு இந்து மதரீதியாகத் துன்புறுத்தலைச் சந்தித்து இந்தியாவுக்குள் வந்தால் அவரை ஊடுருவியவர் என்று அழைக்க முடியாது.

ஆனால், அவரை அகதி என்று அழைக்கலாம். அகதியாக வருபவருக்குக் கவுரவமான வாழ்க்கையை நடத்தவும், நம்முடைய நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை வழங்குவதும் அவசியம். ஆனால், நீண்ட காலமாக இந்த அகதிகள் உரிமைகளுக்காகவும், குடியுரிமைக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இப்போதுள்ள மத்திய அரசு குடியுரிமைத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது சிறந்த நடவடிக்கை. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மதச் சிறுபான்மையினர் இந்தியாவில் கவுரவமான இடத்தைப் பெற முடியும். இந்த மசோதா அகதிகளாக வருபவர்களுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை வழங்க உறுதியளிக்கும்’’.

இவ்வாறு பையாஜி ஜோஷி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT