குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகளின் கடும் எதிர்ப்புகு இடையே இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை) நிறைவேறியது.
இந்நிலையில் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பரவுவதைத் தடுக்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பதற்றமான சூழலில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது.
அரசியல் சாசனத்தின் 14, 15 சட்டப்பிரிவுகளுக்கு எதிராக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பிரபல வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் வாதாடுகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் மக்களவை எம்.பி.யுமான முகமது பஷீர், "எங்கள் சார்பில் கபில் சிபல் ஆஜராகிறார். இந்த மசோதா தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தவறு என்பதால் நாங்களே வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்" என்றார்.