கர்நாடகாவில் கடந்த 5-ம் தேதி நடந்த 15 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் ரமேஷ் ஜார்கிஹோளி, பைரத்தி பசவராஜ் உள்ளிட்ட 11 பேர் காங்கிரஸ் (9), மஜத (2) ஆகிய கட்சிகளில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவர்கள் ஆவர். கடந்த தேர்தலில் காங்கிரஸ், மஜத சார்பில் வென்ற இவர்கள், இடைத்தேர்தலில் அதே தொகுதி யில் பாஜக சார்பில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.
இதையடுத்து நேற்று பைரத்தி பசவராஜ் (கே.ஆர்.புரம்), நாரா யண கவுடா (கே.ஆர்.பேட்டை), சுதாகர் ரெட்டி (சிக்கப்பள்ளாப்பூர்) உள்ளிட்டோர் பெங்களூருவில் உள்ள எடியூரப்பாவின் வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர். இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், ''முந்தைய குமாரசாமி ஆட்சிக்கு எதிராக ராஜினாமா செய்ததாலேயே 17 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது பாஜகவில் இணைந்தால் அமைச்சர் பதவி தரப்படும் என அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி அவர்களுக்கு அளித்த வாக்குறுதி 100 சதவீதம் நிறை வேற்றப்படும்.
17 தகுதி நீக்க எம்எல்ஏக்களில் தற்போது 11 பேர் மீண்டும் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கு வது குறித்து ஆலோசிப்ப தற்காக ஓரிரு நாட்களில் டெல்லி செல்ல இருக்கிறேன். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகி யோரை சந்தித்து பேசி முடிவெடுக் கப்படும். அதன் பிறகு அமைச் சரவை விரிவாக்கம் செய்யப் படும்''என்றார்.
இதனிடையே தேர்தலில் தோல்வி அடைந்த எம்டிபி நாகராஜ், விஸ்வநாத் ஆகிய இரு தகுதி நீக்க எம்எல்ஏக்களும் நேற்று எடியூரப்பாவை சந்தித் தனர். அப்போது பாஜகவுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மற்ற 6 பேருக்கும் உரிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு எடியூரப்பா விரைவில் உரிய பதவிகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித் ததாக தகவல் வெளியாகியுள்ளது.