குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு ராணுவம் விரைந்துள்ளது.
குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை செய்யும் பொருட்டு புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் ஏறக்குறைய 9 மணிநேரம் விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். குடியுரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
(படவிளக்கம்: அசாம் மாநிலம் திஸ்பூரில் தீ வைத்து எரிக்கப்பட்ட பேருந்து)
அசாம் மற்றும் திரிபுராவில் இன்றும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடையாமல் தடுக்கும் பொருட்டு அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு ராணுவம் விரைந்துள்ளது. வன்முறை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு படை வீரர்களுடன் இவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனத் மாநில அரசு தெரிவித்துள்ளது.