இந்தியா

குடியுரிமை மசோதா; நாடாளுமன்றம் நிறைவேற்றினாலும் நீதிமன்றம் ரத்து செய்யும்: சிதம்பரம் நம்பிக்கை

செய்திப்பிரிவு

மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றத்தின் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கூறினார்.

குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் ஏறக்குறைய 9 மணிநேரம் விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்தநிலையில் குடியுரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை மசோதா மீதான விவாத்தின்போது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேசியதாவது:

‘‘இந்துத்துவா செயல் திட்டத்துடன் இந்த குடியுரிமை மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது. இது மிக மோசமான நாள். இதனை ஏற்க முடியாது. கட்டாயமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் நீதியின் முன்பு ரத்து செய்யப்படும்’’ எனக் கூறினார்.

பின்னர் அவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

‘‘குடியுரிமை மசோதாவை 130 கோடி மக்களும் ஆதரிப்பதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு இன்று சோகமான நாள். சட்டவிரோதமானவற்றை செய்யுமாறு அவர்களை கோருகிறார்கள்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றத்தின் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். நிச்சயமாக சில நீதிபதிகள் இந்த சட்டத்தை கட்டாயம் ரத்து செய்வார்கள்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT