குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுமா என்பதற்குக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பதில் அளித்துள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு விரோதமானது எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அவையில் கடுமையாகப் பேசி வருகின்றனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார் அப்போது அவர் கூறுகையில், " மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடியான தாக்குதல். உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டை தவறாக வழி நடத்துகிறார். அடிப்படை உரிமைகள் மீதான நேரடியான தாக்குதல் மத்திய அரசு தாங்கள் சந்தித்தது வரும் உண்மையான பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சிக் குறைவு போன்றவற்றில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது " எனத் தெரிவித்தார்
அப்போது வேணுகோபாலிடம், குடியுரிமைத் திருத்த மசோதா சட்டமாகிவிட்டால் காங்கிரஸ் கட்சி அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லுமா என்று கேட்டனர்.
அதற்கு வேணுகோபால் பதில் அளிக்கையில், " காங்கிரஸ் அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் கருத்தில் கொள்வோம். வரும் 14-ம் தேதி பாரத் பச்சாவோ பேரணி (பாரதத்தை காப்பாற்றுவோம்) நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக இந்த பேரணி அமையும் " எனத் தெரிவித்தார்